80வது சுதந்திர தினமான கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றுகையில் நாட்டில் ஆயுதமேந்திய நக்ஸலைட்டுகளை ஒழித்துவிட்டோம் ஆனால் திமாகி நக்சல்கள் (அறிவுஜீவி நக்சல்கள்) இன்னும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.
இது கேள்வி கேட்டும் எதிர்கட்சிகளை நோக்கி பிரதமர் பயன்படுத்திய வார்த்தையாக பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மறுபுறம் திமாகி நக்சல் என பிரதமர் குறிப்பிட்டது எதிர்கட்சிகளை அல்ல, நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகளை என்று விளக்கம் அளித்தார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.
இந்த சூழலில் ப. சிதம்பரம் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா எதிர்வினை ஆற்றியுள்ளார்.
நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்மா, ப. சிதம்பரம் வெறும் 'திமாகி நக்சல்' அல்ல, அவர் ஒரு ‘பியூர் நக்சல்’ (உண்மையான நக்சல்)
ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நாட்டில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் தொடர்ந்தபோதிலும், அவர் வேண்டுமென்றே நக்சலிசத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா உட்படப் பல காங்கிரஸ் தலைவர்கள் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்ட பிறகும், நக்சலிசத்தை அழிக்கக் காங்கிரஸ் அரசு எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆட்சியில், ஆயுதமேந்திய நக்சலிசம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.