

நாட்டின் 80வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி 'திமாகி நக்சல்' என்ற சொல்லாடலை பயன்படுத்தியது சர்ச்சை ஆனது.
திமாக் என்றால் ஹிந்தியில் அறிவு என அர்த்தமாகும். திமாகி நக்சல் என்றால் அறிவுஜீவி நக்சல் என்பது பொருள்.
80வது சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி, "காடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டுவிட்ட போதிலும், அமைப்பிற்குள் இருக்கும் ‘திமாகி நக்சல்கள்’ இன்னும் வன்முறைக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.
பிரதமரின் இந்த உரை எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், "நான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ‘திமாகி நக்சல்கள்’ என்று குறிப்பிடவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார்.
மார்க்சிஸ்ட், மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை ஆதரித்து, இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள், பிரிவினைவாதிகளை ஆதரித்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க வேண்டும் என்று கோருபவர்கள் ஆகியோரையே பிரதமர் மோடி திமாகி நக்சல்கள் என்று குறிப்பிட்டதாக ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்களை அர்பன் (நகர்ப்புற) நக்சல்கள் என பல முறை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ கடந்த 2019 இல் மோடி தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்து அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் - லடாக் என இரு யூனியன் பிரதேசமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தசஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய போராடியிருப்பார்கள் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.