மம்தா, கோயல் மல்லிக் 
இந்தியா

விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா

நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. 80 எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்துள்ளனர். அவர்களுக்கே பாஜகவை சேர்ந்த சட்டமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார்.

மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 20க்கும் மேற்பட்டோர் விலகியது மம்தாவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள், மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

இந்த சூழலில் நேற்று பேஸ்புக் லைவில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

அதில்,

"பாஜக, காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, சிஐடி உள்ளிட்டவற்றின் அழுத்தம் காரணமாகவோ அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், கைகூப்பி வேண்டுகிறேன், தயவுசெய்து ஜூலை 21க்கு முன்பே வெளியேறிவிடுங்கள்.

நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். நீங்கள் தாராளமாக வெளியேறலாம், இதனால் எங்கள் கட்சி பலவீனமடையாது.

யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சியில் நீடிப்பவர்களே எங்களின் உண்மையான பலம்.

ஜூலை 21க்குப் பிறகு நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

கோயல் மல்லிக்

பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான கோயல் மல்லிக் தனது மாநிலங்களவை எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

தன் பின்னர் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பூபேந்தர் யாதவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியுள்ளது.

இருப்பினும், கோயல் மல்லிக்கின் இந்த முடிவு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "1993, ஜூலை 21, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் கூட மிரட்டப்பட்டு பாஜகவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் போகலாம், ஆனால் அவர்களின் இதயம் எப்போதும் நம்முடன்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்." என தெரிவித்துள்ளார்.

ஜூலை 21 - தியாகிகள் தினம்

1993ல் மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி அரசை எதிர்த்து அப்போது காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவியாக இருந்த மம்தா பானர்ஜி மாபெரும் பேரணி நடத்தினார்.

அப்போதைய தேர்தலில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைமைச் செயலகம் நோக்கி இந்த பேரணி நடந்தது.

ஜூலை 21 அன்று கொல்கத்தாவின் வீதிகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். போராட்டம் தீவிரமடைந்தபோது, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மமதா பானர்ஜியும் இதில் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் இடதுசாரி அரசுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரமடைந்தது. பிற்காலத்தில் அவர் காங்கிரஸிலிருந்து பிரிந்து 1998 ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்க இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவமே அடித்தளமாக அமைந்தது.