மகராஷ்டிராவில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பராமத்தி விமான விபத்தில் அஜித் பவார் மறைவுக்கு பின் அந்த அணி தற்போது அவரின் மனைவியும் மகாரஷ்டிர துணை முதல்வருமான சுனேத்ரா பவார் தலைமையில் இயங்கி வருகிறது.
அஜித் பவார் அணி தற்போது என்டிஏ கூட்டணியில் உள்ள நிலையில் 8 எம்.பி.க்களை வைத்துள்ள சரத் பவார் அணியை அதனுடன் இணைத்து நாடாளுமன்றத்தில் என்டிஏ கூட்டணி பலத்தை அதிகரிப்பதே பாஜகவின் இந்த அவசர நகர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
இந்த இணைப்புக்கு சரத் பவார் இசைவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அண்மையில் என்டிஏவில் உள்ள சிவன்சேனா தலைவரும் மகாராஷ்டிராவின் மற்றொரு துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே உடன் சரத் பவார் சந்திப்பு இந்த ஊகங்களை வலுப்படுத்தியது.
இரு பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக, இரு தரப்பிற்கும் மத்திய அமைச்சரவையில் தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
இரு பிரிவுகளையும் இணைக்கும் இந்த முயற்சிக்கு சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை எம்பியுமான பார்த் பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த இணைப்பு நடந்தால், கட்சியின் அதிகாரம் மீண்டும் மூத்த தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோரின் கைக்குச் சென்றுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த இணைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், பார்த் பவார் கடந்த வியாழன் இரவு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஒருவேளை இணைப்பு தவிர்க்க முடியாததாக மாறினால், சுனேத்ரா பவாரே தொடர்ந்து துணை முதலமைச்சராகவும், கட்சியின் தேசியத் தலைவராகவும் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளுமே இந்த இணைப்புப் பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளன.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, போதிய பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசாங்கத்தின் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது.
இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற பா ஜ க திட்டமிட்டுள்ளது.
மக்களவையின் மொத்த பலம் 540 ஆகும். அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவை.
தற்போது என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. இதில் அண்மையில் உத்தவ் சிவசேனாவின் இருந்து ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய 6 எம்.பிக்களும் அடங்குவர்.
சரத் பவாரின் பிரிவு இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.
இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.