தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்?

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்?
Published on

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்தமுறை தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தாலும், மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளையும் சேர்ந்த மூத்தத் தலைவர்கள், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானநிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சுப்ரியா சுலேவிடம் (சரத் பவார்)இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், மசோதாவின் இறுதி வடிவத்தைப் பொறுத்தே தங்கள் அணியின் நிலைப்பாடு அமையும் என தெரிவித்தார்.

“அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளை 50 சதவீதம் அதிகரிக்க அரசு வழிவகை செய்து, அதன் செயலாக்கத்தையும் தெளிவாக விவரித்தால், நாங்கள் அதை ஆதரிப்போம்,” என்று சுலே செய்தியாளர்களிடம் கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதா

மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஏப்ரல் 17 அன்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத்தவறி மக்களவையில் தோல்வியடைந்தது.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் 543-ல் இருந்து 850-ஆக உயர்த்தவும், அதனுடன் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால் இது தென்மாநிலங்களை கடுமையாக பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இப்போது இருக்கும் இடங்களிலேயே பெண்களின் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஜூலை.20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மீண்டும் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com