

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சரத் பவார், நேற்று முன்தினம் சட்டசபைக்கு சென்றிருந்தார். அங்கு மகாராஷ்டிரா- கர்நாடகா எல்லை தொடர்பாக முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், திடீரென துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அலுவலகத்திற்கு சென்றார். சரத் பவார் அங்கு சென்றபோது, ஏக்நாத் ஷிண்டே அவரது கட்சி எம்.எல்.ஏ.-க்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்த ஆலோசனையை நிறுத்திவிட்டு, சரத் பவாரை வரவேற்று, அவருடன் சிறிது நேரம் பேசினார்.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேயும், உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள சரத் பவாரும் சந்தித்து பேசியது மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பியது. மேலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் சஞ்சய் ராவத், சரத் பவாருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். ஏக்நாத் ஷிண்டே உடனான சந்திப்பு, சரத் பவார் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டசபையில் பேசிய ஏக்நாத் ஷிண்டே "சரத் பவார் வந்துள்ளார் என்பதை அறிந்ததும், அவரை வரவேற்க அவசரமாக சால்வே மற்றும் தேங்காய் உடன் சென்றேன். நாங்கள் அரசியல் எதிராளிகள். ஆனால், எதிரிகள் அல்ல" என்றார்.
சிவசேனா கட்சியில் அதிருப்தி ஏற்பட்டு, ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் ஒரு குழுவாக செயல்பட்டார். பின்னர் சிவசேனா கட்சியை தனதாக்கிக் கொண்டார். பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரானார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார். ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்றார்.
காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT), சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது.
சமீபத்தில் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து பல எம்.பி.க்கள் வெளியேறி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தனர். பெரும்பாலான எம்.பி.க்கள் சென்றதால் உத்தவ் தாக்கரேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை.