இந்திய தேர்தல் ஆணையத்தில் சமீபத்தில் வெடித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று கரப்பான்பூச்சி கட்சி சார்பிலும், அகிய இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிஜேபி சார்பில் மும்பையிலும், ஏஐஎஸ்ஏ சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாணவர் சங்க போராட்டம் இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாநிலங்களவை எம்.பி. மனோஜ் ஜா மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். மேலும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இதனால் போராட்டத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என டெல்லி போலீசார் கணித்திருந்தனர்.
இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய ஆயுதக் காவல் படையினர் பணியில் அமர்த்தப்பட்டு, புது டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் மட்டுமின்றி டெல்லியின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை குழுக்களுடன் மத்திய ஆயுதக் காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அனுமதியற்ற கூட்டங்களைத் தடுக்கவும், நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும், பிற முக்கிய இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கூடுதல் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இப்போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், இந்திய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.