இந்திய எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், திபெத்தியப் பகுதியில் உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையாக அமையவிருக்கும் திட்டத்தின் கட்டுமானத்தை சீன தொடங்கியுள்ளது.
இதுகுறித்து உளவுத்துறையின் பிரத்யேகத் தகவல்கள் மற்றும் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தொடர்ச்சியான எதிர்ப்புகளையும் மீறி பெய்ஜிங் இந்தத் திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது.
சீனாவின் அணையில் இருந்து திடீரென நீர் திறந்துவிடப்படுவதைத் தடுக்கும் ஒரு அரணாகச் செயல்படவும், இரு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கவும், சியாங் ஆற்றின் மீது ஒரு நீர்மின் அணையை இந்தியா கட்டத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா தற்போது, இந்த நதி தொடர்பாக பெய்ஜிங்கின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கண்காணித்துக்கொண்டே, தனது பதிலடியை விரைவுபடுத்தவும் முயன்று வருகிறது.
இந்நிலையில் சீன அணைக்கு நேரடிப் பதிலடியாக அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் ஆற்றின் மீது "சியாங் அப்பர் பல்நோக்குத் திட்டத்தை (SUMP)" இந்தியா முன்னெடுத்துள்ளது.
இதன் மூலம் முன்மொழியப்பட்ட 11,000 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டினை உறுதி செய்யக்கூடிய மிகப்பெரிய அணையாக இத்திட்டம் மாறும்.
மேலும் ஆண்டுக்கு சுமார் 47 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் உத்தேச செலவு தோராயமாக சுமார் ரூ. 1.5 லட்சம் கோடி ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.