மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தவிருந்த டெல்லி போராட்டப் பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயிலில் இருந்து மாநில காவல் தலைமையகம் வரை இந்தப் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.
கரப்பான்பூச்சி கட்சியினரால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கைவிட மத்திய அரசு மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி, போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தது.
மத்திய அரசு அளித்த மூன்று வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே, அதாவது தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனைக் கண்டித்து செப்.5ம் தேதி போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
இதனிடையே இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க அல்ல பேரணியை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்தது.
மத்திய மற்றும் மாநில அரசுகளே இதில் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி செப்.10ம் தேதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மேற்குறிப்பிட்டிருந்த மனு விசாரணையைத் தொடர்ந்து மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியிருந்தது.
இந்த மனுத்தாக்கலைத் தொடர்ந்து, நீட் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை இனியும் தொடர விரும்பவில்லை என டெல்லி காவல்துறை திங்கள்கிழமை (ஆக.31) மாலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இந்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து பேரணி அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.