

இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய, தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளது. இந்த வழக்கை நாளை (ஆக.31) உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது.
இந்த போராட்டம் நாடுதழுவியதாக மாறிய நிலையில், மத்திய அரசு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வைத்தது.
இதில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து செப்.5ம் தேதி கரப்பான்பூச்சி கட்சி பேரணி அறிவித்துள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.