

டெல்லியில் உள்ள இந்திய நுழைவாயிலில் இருந்து டெல்லி காவல்துறை தலைமையகம் வரை, செப்.5ம் தேதி போராட்டப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுவதற்கு வழிவகுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி செப்.5ம் தேதி இளைஞர் போராட்டப் பேரணியை அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.,
“ஜூலை 25 அன்று இந்தியாவின் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசை ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் செய்து வருவதாலும், அவற்றைச் செயல்படுத்தாமல் தவிர்த்து வருவதாலும், அமைதியான முறையில் மக்களைத் திரட்டும் போராட்டத்தை மீண்டும் தொடங்க CJP-யின் தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது.
நீட் (NEET) தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தலைமையில், செப்டம்பர் 5 அன்று டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயில் முதல் டெல்லி காவல் துறை தலைமையகம் வரை அமைதியான இளைஞர் பேரணியை CJP நடத்தவுள்ளது.
அரசு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். எங்கள் பொறுமையை பலவீனம் என்று தவறாகக் கருதக்கூடாது.” என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மூன்று முக்கிய வாக்குறுதிகளை மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்வைத்தது.
இதில் தர்மேந்திர பிரதான் பதவி விலகம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைவுறுத்தி இந்த போராட்டப் பேரணியை கரப்பான்பூச்சி கட்சி முன்னெடுக்கிறது.