

டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயிலில் இருந்து டெல்லி தலைமை காவல் செயலகம் வரை செப்.5ம் தேதி போராட்டப் பேரணி அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
நீட் போராட்டத்தின்போது அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து, இந்தப் பேரணியை அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் பேரணி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய மற்றும் டெல்லி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
லூதியன்ஸ் டெல்லி, இந்திய நுழைவாயில், மத்திய அரசு வளாகம் உள்ளிட்ட பாதுகாப்பு உணர்திறன்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், பெரிய அளவிலான மக்கள் திரள்வு உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி சிவம் உபாத்யாய் மற்றும் ஓய்வுபெற்ற டெல்லி காவல்துறை அதிகாரி ராஜேந்திர சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு முடியும் வரை, கரப்பான்பூச்சி கட்சியின் இந்த பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தநிலையில்.,
“போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் சட்டப்படியும், அமைதியான முறையிலும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் எனக் கூறி, பேரணியைத் தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தது.
மேலும் இதற்கு மாறாக எதையும் அனுமானிக்கவோ அல்லது ஊகிக்கவோ எங்களுக்கு முன் வலுவான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டது.
தொடர்ந்து “இது வேறு ஒரு தரப்பில் பரிசீலிக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் தலையிட வேண்டியதில்லை. இவை சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையத்தால் பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.
எது சட்டப்பூர்வமானது, எது சட்டவிரோதமானது என்று கூறுவது அந்த ஆணையத்தின் பொறுப்பாகும். இரு தரப்பினரும் சட்டக் கட்டமைப்பிற்கு இணங்கவும், சட்டப்பூர்வமாகவும், நியாயமாகவும் செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்து,
இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளே முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு விசாரணையை செப்.10ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.