இந்தியா

"நான் ராகுல் காந்தியின் அனுமன்" – உ.பி. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அஜய் ராய் உருக்கம்!

நான் ஒரு மகள், என்னால் போராட முடியும்' என்ற முழக்கத்திற்கு நானே மிகச்சிறந்த உதாரணம் - ஆராதனா மிஸ்ரா

உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய், தான் எப்போதும் ராகுல் காந்தியின் 'அனுமன்' ஆகத் தொடர்ந்து செயல்படுவேன் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அங்கு அதிரடி நிறுவன மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, அஜய் ராய்க்குப் பதிலாக ஆராதனா மிஸ்ரா மோனா உத்தரப் பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி எங்கு சொல்கிறாரோ அங்கு நான் இருப்பேன்!

தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அஜய் ராய் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தேசியத் தலைமை எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன்.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்துத் துணிச்சலாக, முழு பலத்துடன் போரிடத் தலைமை எனக்குக் கட்டளையிட்டது, நான் அதைச் செய்தேன்; தொடர்ந்து போராடுவேன்.

நான் நிச்சயமாக என் தலைவர் ராகுல் காந்தியின் 'அனுமன்' போன்றவன். அவர் எங்கு இருக்கச் சொல்கிறாரோ, அங்கே நான் இருப்பேன். பதவிகள் தற்காலிகமானவை என்று கூறினார்.

மோடிக்கு போட்டி

மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் தன்னைப்போன்ற ஒரு எளிய தொண்டனைப் பிரதமர் மோடிக்கு எதிராகக் களம் இறக்கியதற்காக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மேலிடத்திற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அந்தத் தேர்தலில் 4.6 லட்சம் வாக்குகளைப் பெற்று, 7 சுற்றுகளில் மோடியை விட முன்னிலை பெற்று வலுவான போட்டியைத் தந்ததை அவர் நினைவு கூர்ந்தார். 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தான், எப்போதும் மக்கள் நலனுக்காகவும் அநீதிக்கு எதிராகவும் தொடர்ந்து களத்தில் நிற்பேன் என்றும் கூறினார்.

உ.பி. காங்கிரஸில் புதிய உதயம்: ஆராதனா மிஸ்ரா

புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆராதனா மிஸ்ரா மோனா, 2027 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கக் காங்கிரஸ் கட்சி முழுத் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, இன்று உ.பி. காங்கிரஸில் ஒரு புதிய விடியல் பிறந்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த மாபெரும் பொறுப்பை வழங்கிய தலைமைக்கு நன்றி. சவால் பெரியது, நேரம் குறைவாக உள்ளது; எனவே ஒவ்வொரு தொண்டனும் இணைந்து முழு பலத்துடன் உழைக்க வேண்டும்.

'நான் ஒரு மகள், என்னால் போராட முடியும்' என்ற முழக்கத்திற்கு நானே மிகச்சிறந்த உதாரணம். 2022 தேர்தலிலேயே பிரியங்கா காந்தியின் தலைமையில் 40% பெண்களுக்கு வாய்ப்பளித்து காங்கிரஸ் சாதித்துக் காட்டியது. வரும் 2027 தேர்தலில் 'இந்தியா' (INDIA) கூட்டணியுடன் இணைந்து முழு பலத்துடன் காங்கிரஸ் போட்டியிடும்.

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸின் இந்த அதிரடி தலைமை மாற்றம் அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT