இந்தியா

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவு.. இன்னும் நீதிக்கு காத்திருக்கும் குடும்பங்கள்

ஒரு சுதந்திரமான நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியறுத்தியுள்ளது.

கடந்த 2025 ஜூன் 12 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மாணவர் விடுதி ஒன்றின் மீது விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணித்தவர்களும், விடுதியில் இருந்தவர்களும் என மொத்தமாக 260 பேர் கொல்லப்பட்டனர். விமானத்தில் பயணித்த 242 பயணிகள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் இதில் அடங்குவர்.

விமானத்தில் இருந்த ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக ஜன்னல் வழியே கீழே குதித்து படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

காரணம்

கடைசி நேரத்தில் விமான எரிபொருள் கட்டுப்பாட்டு பொத்தான்கள் செயலிழந்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து இந்த விபத்தின் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தை இயக்கிய விமானியின் தவறும் இதில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதை மத்திய அரசு மறுத்தது.

இந்த விபத்து நிகழ்ந்து ஒரு வருடம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இன்னும் விசாரணை முடிவின்றி தொடர்வதால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கோரிக்கை

இந்நிலையில் இந்திய விமானிகள் கூட்டமைப்பு இவ்விபத்து குறித்து ஒரு சுதந்திரமான நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியறுத்தியுள்ளது.

இவ்வமைப்பு இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதித்துறை விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு இன்னும் முழுமையான இழப்பீட்டுத் தொகை போய்ச் சேரவில்லை என்ற கவலையையும் விமானிகள் சங்கம் எழுப்பியுள்ளது.

அஞ்சலி

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவாக இன்று நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இன்று மதியம் டெல்லி, மும்பை, அகமதாபாத் ஆகிய இந்திய அலுவலகங்கள் மற்றும் லண்டனின் ஹீத்ரோ, கேட்விக் விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவரும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்த உள்ளனர்.