டெல்லியில் தேர்தல் தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை அக்.10 நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு, 57 மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி போலீசார், டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் (DMRC) கேட்டுக்கொண்டுள்ளனர்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் சிஜேபி அமைப்பினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி டெல்லி போலீசார் அனுப்பிய கடிதத்தில், இன்று (அக்டோபர் 9) இரவு 9 மணி முதல் 57 மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலையங்களில் மெட்ரோ ரெயில்களின் சேவை இடைவெளியையும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீராகும் வரை, அக்டோபர் 10-ம் தேதியும் இந்தக் கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டியிருக்கலாம் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கட்டுபாடுகளின் படி ,ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட், புதுடெல்லி, படேல் சவுக், ஜன்பத், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ., சுப்ரீம் கோர்ட், இந்திரபிரஸ்தா, காஷ்மீரி கேட், கரோல் பாக், ஹவுஸ் காஸ், லஜ்பத் நகர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஷாதரா, உள்ளிட்ட 57 நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கைகள் டெல்லியின் மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பல மெட்ரோ நிலையங்களை உள்ளடக்கியுள்ளன.இரண்டு மெட்ரோ வழித்தடங்களிலும் உள்ள ஐஎன்ஏ நிலையமும் சேர்க்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது அதிக அளவில் மக்கள் கூட வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் பரிந்துரையை போலீசார் முன்வைத்துள்ளனர். இருப்பினும், 57 நிலையங்களிலும் வாயில்களை மூடுவது மற்றும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி முடிவை டெல்லி மெட்ரோ நிர்வாகமே எடுக்க வேண்டும்.
எனவே, டெல்லியில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், பயணத்திற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.