ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற காக்ரோச் ஜனதா கட்சி தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய பா.ஜ.க குண்டர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்யாவிட்டால், ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என சி.ஜே.பி நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே எச்சரித்துள்ளார்.
சி.ஜே.பி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரான்கா தலைமையில், தன்னார்வலர்கள் ஜெய்ப்பூரின் பக்ரு தொகுதிக்குட்பட்ட ராம்பூரா கன்வர்புரா கிராமத்திற்குச் சென்றனர்.
அங்குள்ள அரசு முதன்மைப் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் ‘ஸ்கூல் திக் கரோ’ பள்ளிகளைச் சீரமைப்போம் பிரச்சாரத்தின் கீழ் இப்பள்ளியை ஆய்வு செய்ய அவர்கள் முற்பட்டனர்.
பள்ளிக்குள் நுழைய முயன்ற சி.ஜே.பி குழுவினரை ஒரு கும்பல் வழிமறித்து கற்களை வீசித் தாக்கியது. "அர்பன் நக்சல்கள், தேசவிரோதிகள், பாகிஸ்தானியர்கள்" என முழக்கமிட்ட அசுதோஷ் ரான்காவின் சட்டை கிழிக்கப்பட்டதுடன், வாகனங்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறையில் பெண் தொண்டர் ஒருவர் உட்பட பலர் காயமடைந்தனர், ஒருவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்து அசுதோஷ் ரான்கா பேசுகையில், "கிராம மக்கள் அழைப்பின் பேரில் தான் நாங்கள் சென்றோம், ஆனால் கல்வி அமைச்சர் மதன் திலாவரின் தூண்டுதலின் பேரில் பா.ஜ.க குண்டர்கள் திட்டமிட்டு எங்கள் மீது வன்முறையை ஏவியுள்ளனர்"என்று கூறினார்.
இச்சம்பவம் குறித்து சி.ஜே.பி தலைவர் அபிஜீத் திப்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ராஜஸ்தானில் என்ன அராஜகம் நடக்கிறது? பா.ஜ.க குண்டர்கள் எங்கள் தொண்டர்களின் இரத்தத்தை குடிக்க அலைகிறார்கள்.
பள்ளிகள் மாட்டுத் தொழுவத்தில் நடப்பது பற்றி கவலைப்படாத காவல்துறை, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது" என்று சாடினார்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டாலும், சம்பந்தப்பட்ட பள்ளியைச் சீரமைக்கும் பணியைத் அரசாங்கம் தொடங்காவிட்டாலும் டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும், அதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.