கல்வி முழக்கத்தை இழந்ததா ஆம் ஆத்மி?: அபிஜித் தீப்கே 'சிஜேபி' அமைப்பின் B-டீமாக மாறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது விமர்சனம்!

களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிஜேபி அமைப்பின் கோரிக்கைகளுக்காக ஆம் ஆத்மி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
 Arvind Kejriwal-Abhijit Deepke
Published on
Summary

சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய அரசியல் அடையாளமாகவும், தேர்தல் வெற்றிகளுக்கான முதன்மை ஆயுதமாகவும் இருந்தது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் ஆகும். ஆனால், சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சி சந்தித்து வரும் அரசியல் பின்னடைவுகள் மற்றும் தலைமை மீதான நம்பகத்தன்மை கேள்விகளால், கட்சி தனது முதன்மை முகவரியான கல்வி சார்ந்த முழக்கங்களை இழந்து வருவதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே தலைமையிலான 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) என்ற இளைஞர் அமைப்பு, அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சிஜேபிக்கு ஆம் ஆத்மியின் தொடர் ஆதரவு

சமீபத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி சார்பில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாகப் பங்கேற்று தனது ஆதரவைத் தெரிவித்தார். களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிஜேபி அமைப்பின் கோரிக்கைகளுக்காக ஆம் ஆத்மி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

கல்வித் துறையை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி எழுப்பி வந்த குரலை தற்போது சிஜேபி அமைப்பு கையில் எடுத்து முன்னெடுத்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் மேடை மற்றும் முக்கியத்துவத்தை அந்த அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பி-டீமாக செயல்படுகிறதா என்ற விவாதம் வலுத்துள்ளது.

சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பழைய நிர்வாகிகளின் தலைமையில் இயங்கும் இந்த இளைஞர் இயக்கம் தற்போது நாடு முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் காலியிடங்கள் மற்றும் மாணவர் நலன் குறித்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த முழக்கங்களையே பிறிதொரு அமைப்பின் மூலம் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com