இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து இந்திய அரசிடம் ஐநா சபை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதற்கட்டமாக பீகாரிலும், இரண்டாம் கட்டமாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட தேர்தலை சந்தித்த மாநிலங்களிலும் எஸ்ஐஆர் நடந்து முடிந்தது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் தொடங்கியுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை குறிப்பாக சிறுபான்மையினரை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
ஐ.நா சபையின் சிறுபான்மையினர் விவகாரங்கள், கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய பிரிவுகளுக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர்கள் நிக்கோலஸ் லெவ்ராட், ஐரின் கான் மற்றும் நசீலா கானியா ஆகியோர் இணைந்து இந்திய அரசுக்கு இதுதொடர்பாக கடந்த மே 1 அன்று கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி,
இந்த சிறப்புத் தீவிர சீர்திருத்தத்தின் மூலம் இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்தமாக 5.2 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது மனித உரிமைகள், பேச்சுரிமை மற்றும் அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமைகள் ஆகியவை மீறப்பட்டுள்ளனவா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதற்கு மேற்கு வங்காளத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியை ஐ.நா தூதர்கள் கடிதத்தில் ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது மேற்கு வங்க முதல்வராக உள்ள பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வென்ற நந்திகிராம் தொகுதியில் நீக்கப்பட்ட ஒட்டுமொத்த வாக்காளர் பெயர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம் வாக்காளர்கள் ஆவர்.
ஆனால், அந்தத் தொகுதியின் மொத்த மக்கள் தொகையிலேயே முஸ்லிம்கள் 25 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
நீக்கப்பட்ட பலரிடம் முறையான, செல்லுபடியாகும் இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தபோதிலும் அவர்களின் வோட்டுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போதிலும், இந்த சீர்திருத்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதேபோன்ற விவகாரங்கள் பீகாரிலும் நடந்துள்ளதால் சிறுபான்மையினரிடையே குடியுரிமை சார்ந்த அச்சம் எழுந்துள்ளதாக ஐ.நா தூதர்கள் தங்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய இந்திய அரசு செயற்கை நுண்ணறிவுவை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் சுட்டிக்காட்டிய ஐநா தூதர்கள் ஏஐ தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தகுதியான லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து தவறாக வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினரைத் தேர்தல் நடைமுறையிலிருந்து நீக்குவது போன்ற அணுகுமுறை, முஸ்லிம் குடிமக்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதைப் போலாகிவிடும்.
இது இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள 'சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு உடன்படிக்கை' மற்றும் 1992ஆம் ஆண்டின் ஐ.நாவின் சிறுபான்மையினர் உரிமைப் பிரகடன' திற்கு எதிரானது.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கை, அதற்கான முறையான காரணங்கள், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளின் எண்ணிக்கை மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டைத் தவிர்க்க அரசு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட 7 முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவான அறிக்கை மற்றும் விளக்கத்தை அளிக்குமாறு இந்தியாவிடம் ஐ நா தூதர்கள் தங்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.