

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) பணியின் 3ஆம் கட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன் அங்கு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டது. பீகாரில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மொத்த வாக்காளர்களில் இது 5 முதல் 6 சதவீதம். அதன் பின்னர் நடந்த பீகார் தேர்தலில் ஆர்ஜேடி - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகியவற்றுக்கு இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்து முடிந்தது.
உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2.04 கோடி வாக்காளர்களும், அடுத்தபடியாக மேற்குவங்கத்தில் 83.86 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3ஆம் கட்ட எஸ்ஐஆர் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜார்கண்டின் கர்வா மாவட்டத்தில் உள்ள கப்ரோ கிராமத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி ஜமிலா பீபி என்பவர் பொதுமக்களிடம் பணம் கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வாக்காளர் சரிபார்ப்பு படிவங்களை வழங்குவதற்கும், பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கும் அவர் மக்களிடம் ரூ. 50 முதல் ரூ. 100 வரை கேட்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
உள்ளூர்வாசியான முகமது பர்வேஸ் அன்சாரி ஊடகங்களிடம் பேசுகையில்,
"படிவத்தை நிரப்புவதற்கே அந்த பி.எல்.ஓ எங்களிடம் ரூ. 50 கேட்கிறார். யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணம் கொடுக்க மறுத்தால், 'உங்கள் இந்தியக் குடியுரிமையை நாங்கள் பறித்துவிடுவோம்' என்று மிரட்டுகிறார்.
இதுகுறித்து பலரிடம் நாங்கள் முறையிட்டும், அவர்கள் 'இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள்' என்று அலட்சியமாகப் பேசுகிறார்கள்" என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பி.எல்.ஓ ஜமிலா பீபி, தன் மீதான நற்பெயரைக் கெடுப்பதற்காகச் திட்டமிட்டு நடத்தப்படும் சதி இது என்று அவர் கூறியுள்ளார்.