search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீர்மானம் நிறைவேற்றிய கிராம சபைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும்: திருநாவுக்கரசர், அன்புமணி அறிக்கை
    X

    தீர்மானம் நிறைவேற்றிய கிராம சபைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும்: திருநாவுக்கரசர், அன்புமணி அறிக்கை

    சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஏற்று, தீர்மானம் நிறைவேற்றிய கிராம சபைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.

    கடந்த மே 1-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மதுக் கடைகளை மூட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரியிருந்தோம். இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பெருமாநாடு கிராம பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நானே பங்கேற்று மதுக்கடைகளை மூட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல, தமிழகத்தின் பல கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர முனைப்பு காட்டியதற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

    இந்தியாவின் அடித்தளமே கிராமங்கள் தான். பஞ்சாயத்துராஜின் அடித்தளம் கிராம சபை. கிராம சபைக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்று கனவு கண்டவர் காந்தியடிகள். அந்த கனவை நிறைவேற்றியவர் ராஜீவ்காந்தி.

    இன்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக கிராம சபையின் தீர்மானத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு மக்கள் பங்கேற்கிற ஜனநாயகம் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

    இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதில் தமிழக காங்கிரசின் பங்கு மகத்தானது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனி கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகள் மூடப்படும் என்கிற நற்செய்தி தமிழகத்தை நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



    மதுக்கடைகளுக்கு எதிராக கிராம அவைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் புதிய மதுக்கடை திறப்பதோ, வேறு இடங்களில் இருந்து இடமாற்றம் செய்வதோ கூடாது’’ என்று தீர்ப்பளித்துள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று கடந்த காலங்களில் பல தீர்ப்புகளில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

    அதேபோல், ஒரு மதுக்கடைக்கு எதிராக கிராம அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அங்குள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

    ஆனால், இந்தத் தீர்ப்புகள் எதையும் தமிழக அரசு மதிப்பதில்லை என்பது வேதனையான உண்மை ஆகும். எனினும், கடந்த காலங்களில் வழங்கப்பட்டத் தீர்ப்புகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கடைக்கு எதிராக மட்டும் வழங்கப்பட்ட தீர்ப்பு எனும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இப்போது அளித்துள்ளத் தீர்ப்பு தமிழகம் முழுமைக்கும் பொதுவானத் தீர்ப்பு என்பதால் இந்தத் தீர்ப்பை மதித்து புதிய மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    கடந்த மே 1-ஆம் தேதி நடந்த கிராம அவைக் கூட்டங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்படி தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

    அதை ஏற்று பல்லாயிரக்கணக்கான கிராம அவைகளில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடங்களில் மதுக்கடைகளை புதிதாக திறக்கக்கூடாது என்பதுடன், ஏற்கனவே திறக்கப்பட்ட மதுக்கடைகளையும் மூட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை? இப்போது இயங்கும் கடைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்களையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

    மேலும், மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அப்பாவி பொதுமக்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறுஅன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×