மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்

தேரோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்
Published on: 

மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்ம பதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெற்றது.

அய்யா வைகுண்டர்

தினமும் இரவில் அய்யா வைகுண்டர் காளை, அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்து பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அய்யா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை உகப்படிப்பும், தொடர்ந்து திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது.

தேர்

மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் வானவேடிக்கை, சங்கு முழக்கம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளம் முழங்கப்பட்டது.

இதில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.ஜெயத்துரை நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி. பத்மநாபன், பிரைட் சி.முருகன், சி அருணாச்சலம் கோவை அய்யா வைகுண்டர் சிவபதி கே.அரிராமன், அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமி நாதன், பொருளாளர். பி. ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை தலைவர் வி சுந்தரேசன், இணைப் பொது செயலாளர்கே. ராமமூர்த்தி தேசிய. நாடார் சங்க பொதுச் செயலாளர் என் ஜினீயர் டி. விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மணலி புதுநகர்

தேரோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருத்தேரில் எழுந்தருளிய அய்யா, மணலி புதுநகர் பகுதிகளில் வீதிஉலா வந்து, பின்னர் கோவிலை வந்தடைந்தார். விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com