

தமிழர்களின் வாழ்வோடும் வளத்தோடும் பெருந்தொடர்பு கொண்டவை இந்து சமய வழிபாடுகள். வழிபாடுகளில், ஓரிரு நாட்கள் மட்டுமே அனுசரிக்கப்படும் விசேஷங்கள் அதிகம் உண்டு. ஆனால், ஒரு மாதம் முழுவதும் பெண்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் விசேஷம் என்றால் அது ஆடி மாத அம்மன் வழிபாடு மட்டும்தான். அதே நேரம், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வழிபட வேண்டிய சிறப்புமிக்க நாளாக ஆடிக் கார்த்திகை திகழ்கிறது.
முருகப்பெருமானின் முதலாம் படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள் தோறும் உள்ளூர், வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
பக்தர்கள் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி கார்த்திகையை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், திரவிய பொடி உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளுவார். சுவாமி பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, மேல ரத வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமிக்கும் ஆடி கார்த்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதேபோல் மதுரை நேதாஜி சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் மங்கல பொருட்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.