சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்

அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றதுஇன்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
தலைமைப்பதியில் தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
தலைமைப்பதியில் தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

விழாவில் மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்த போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக வைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவில் நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com