கந்தசஷ்டிவிழா: சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்

சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம்.சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை.
கந்தசஷ்டிவிழா: சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

திருச்செந்தூர்:

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com