திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் - வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.
Tiruchendur temple avani therottam
Published on
Summary

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை இழுத்து வழிபட்டனர்.

திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது

பச்சை சாத்தி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம்திருவிழா அன்று குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழா காலையில் சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்திலும், மாலையில் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி ரத வீதிகளில் வீதியுலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடந்தது.

8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதியுலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடந்தது. தொடர்ந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று, பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

அரோகரா கோஷம்

காலை 7.05 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. 7.45 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் புறப்பட்டு ரதவீதிகள் வழியாக வந்து நிலையம் சேர்ந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை இழுத்து வழிபட்டனர்.

12-ம் திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி - அம்பாள் மஞ்சள் நீராட்டு கோலத்தில் ரதவீதிகள் வழியாக வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் மண்டகப்படி வந்து அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்று சுவாமியும்- அம்பாளும் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com