‘நெருக்கடி எங்களால் உருவாகவில்லை... நீங்கள்தான் தார்மீக பொறுப்பு’ - இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் உதவியல்ல, இழப்பீடு கோரும் நேபாளம்!

கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
‘நெருக்கடி எங்களால் உருவாகவில்லை... நீங்கள்தான் தார்மீக பொறுப்பு’ - இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் உதவியல்ல, இழப்பீடு கோரும் நேபாளம்!
Published on

நேபாளம் உதவி கோரவில்லை, மாறாக, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிடமிருந்து காலநிலை மாற்றத்திற்கான இழப்பீட்டைக் கோருவதாக நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குகள் தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கானல் கருத்து தெரிவித்துள்ளார்.

நேபாள வெள்ளப்பெருக்கு

ஆகஸ்ட் 26 அன்று, லாங்டாங் லிருங்கின் வடக்குப் பகுதியில் சுமார் 17,000 அடி உயரத்தில் இருந்த ஒரு பனிமலை, நேபாள-திபெத் எல்லையில் உள்ள போதே கோஷி ஆற்றில் சரிந்து விழுந்து, அதன் வழியாக வரும் மத்திய நேபாளத்தின் மலைப்பகுதிகளில் உள்ள திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கால் நேபாளம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஆற்றின் பாதையில் வழியாக இருந்த அதையும் தாண்டிய பகுதிகளிலும் இருந்த சாலைகள், வீடுகள், பாலங்கள், பள்ளிகள் என அனைத்தும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 1000த்தை கடந்துள்ள நிலையில், சேற்றில் தோண்ட தோண்ட இன்னும் மனிதர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

1 பில்லியன் டாலர் செலவு

ஒருபக்கம் மீட்பு பணி நடைபெற்று வந்தாலும், மறுபுறம் வீடுகளை, உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மறுசீரமைக்கும் பணிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

திடீர் வெள்ளத்திற்குப் பிறகான புனரமைப்பு பணிகளுக்கான செலவு மிக அதிகமாக உள்ளது. மீட்புப் பணிகளுக்கான செலவு 5 பில்லியன் டாலர் என காத்மாண்டு மதிப்பிட்டுள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டதட்ட 10-ல் ஒரு பங்கு ஆகும்.

உதவி அல்ல இழப்பீடு

இந்தச் சூழலில் நேபாளம் தற்போது மனிதாபிமான உதவிகளைக் கோருவதிலிருந்து விலகி, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து “காலநிலை இழப்பீடு” கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதாவது இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இழப்பீட்டிற்கு அதன் பொறுப்பாளர்களே நிவாரணம் வழங்க வேண்டும் என நேபாளம் தெரிவித்துள்ளது.

இந்த பேரிடர் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்றும், இதற்கு காரணமான நாடுகள் அதற்கான இழப்பீட்டை தரவேண்டும் என நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கானல் தெரிவித்துள்ளார்.

உதவி அல்ல தார்மீகப் பொறுப்பு

இதுதொடர்பாக நேற்று பேசிய அவர்.,

“சேதம் மிக அதிகம். பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன; அதோடு, பள்ளிகள் மற்றும் பல பில்லியன் ரூபாய் மதிப்பிலான நீர்மின் திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது மனிதாபிமானம் சார்ந்த விஷயம் அல்ல; இது சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பு சம்பந்தப்பட்ட விஷயம்.

உலகில் அதிக மாசு உமிழும் நாடான சீனா, இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்கா, மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா போன்ற முக்கிய தொழிற்சாலை நாடுகளுக்கு, நேபாளம் போன்ற பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம்

நேபாள குற்றச்சாட்டைப் போலவே, உலகளாவிய CO₂ வெளியேற்றத்தில் சுமார் 29 முதல் 33 சதவிகிதம் வரை பங்களித்து, சீனா முதலிடத்திலும், 6.2 பில்லியன் மெட்ரிக் டன்கள் உடன் 12.7 முதல் 15 சதவிகிதம் வரை வகித்து அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.4 பில்லியன் மெட்ரிக் டன் CO₂-க்கு இணையான வாயுவை வெளியிடுகிறது. இது உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 7.3 சதவீதம் முதல் 8.3 சதவீதம் ஆகும்.

இந்தப் பசுமை இல்ல வாயுக்கள் பருவநிலை மாற்றத்திற்குக் காரணமாகி , இமயமலைப் பகுதியை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com