

கனடாவின் டொராண்டோ நகரை புயல் காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவு இடி மின்னலுடன் கூடிய கனமழை புரட்டி எடுத்தது.
நேற்று முன் தினம் நகரின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்த்தது.
புயலின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் சேதத்தை சந்தித்தன. முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி மூடப்பட்டன. சுரங்கப்பாதை ரெயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
குறிப்பாக டொராண்டோவில் உள்ள புகழ்பெற்ற ரோஜர்ஸ் ஸ்டேடியம் பலத்த சேதமடைந்தது. மைதானம் முழுவதும் இடிபாடுகள் சிதறிக் கிடகின்றது. நல்வாய்ப்பாக எவருக்கும் காயங்கள் எதுவுமில்லை.
நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின் கம்பங்கள் உடைந்து ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நேற்று மதியம் வரை சுமார் 5,300 வீடுகள் இருளில் மூழ்கியிருந்தன. மின்சாரம் திரும்பியபோதிலும் இன்றைய நிலவரப்படி பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகுந்த பாதிப்படைந்துள்ளது.
24 மணி நேரத்தில் தீயணைப்புத் துறைக்கு மட்டும் சுமார் 1,500 அவசர அழைப்புகள் வந்துள்ளன.
டொராண்டோ மேயர் ஒலிவியா சோ கூறுகையில், புயல் கடந்தபோதிலும் நகர நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து வீதிகளும் சீரமைக்கப்பட்டு, ஒவ்வொரு குடிமகனுக்கும் மின்சாரம் கிடைக்கும் வரை மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என அவர் தெரிவித்தார்.
நகர அதிகாரி பால் ஜான்சன் பேசுகையில், "நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெய்யாமல், டொராண்டோ முழுவதுமே 11 மி.மீ முதல் 110 மி.மீ வரை மிகக் கடுமையான மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கடுமையான புயல் எனக் குறிப்பிடலாம்" என்றார்.