

இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.
வெள்ளம்… புயல்… நிலநடுக்கம்… வெப்பம்… உருகும் பனிப்பாறைகள் என இந்த ஆண்டு இயற்கை பேரழிவுகள் அதிகம் கொண்ட ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த பேரழிவுகள் தனித்தனி சம்பவங்களா? அல்லது வேகமாக மாறிவரும் நமது பூமியின் புதிய முகமா? 2026-ம் ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் எதைக் கொண்டு வரப்போகின்றன? என்ற அச்ச உணர்வு பலருக்கு ஏற்பட்டு உள்ளது. இது விஞ்ஞானிகளையும் சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது எனலாம்.
அதிலும் 26-ந்தேதி சற்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு மாதத்தில் மற்ற தேதிகளைப் போலவே 26-ந் தேதியும் சாதாரணமான நாள் தான். ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு விதமான தன்மை, ஜோதிட ரீதியாக, எண்ணியல் ரீதியாக கிரகங்களின் ஆளுமை இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, உலகையே உலுக்கிய சில, மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளின் தேதிகளைத் பார்க்கும்போது, ‘26’ என்ற எண் மீண்டும் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது.
உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய பேரழிவுகளை உற்றுநோக்கினால், அவற்றின் பின்னணியில் 26 என்ற எண் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருக்கிறது.
2026-ம் ஆண்டின் ஆரம்பமே தென்னாபிரிக்காவுக்கு பெரும் சோகத்துடன் தொடங்கியது. மொசம்பிக், தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் பல வாரங்களாக கொட்டித் தீர்த்த மழையால் ஆறுகள் கரைபுரண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. சில பகுதிகளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களுக்குள் பெய்ததாக ஆய்வுகள் தெரிவித்தன. சுமார் 200 பேர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். காலநிலை மாற்றமும் லா நினா வானிலை மாற்றமும் மழையின் தீவிரத்தை அதிகரித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதற்கு அடுத்ததாக மடகாஸ்கர். பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 2 புயல்கள் அந்தத் தீவைத் தாக்கின. முதலில் பிதியா சூறாவளி; அதைத் தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்த ஜிசானி சூறாவளி. ஜிசானி சூறாவளியால் மட்டும் குறைந்தது 59 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பிதியா புயல் மேலும் 14 உயிர்களைப் பறித்திருந்தது.
மார்ச் மாதம் கொங்கோவின் ருபாயா பகுதியில் உள்ள கோல்டன் சுரங்கத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் சுமார் 70 பேர் குழந்தைகள். மண்ணுக்கடியில் கனிமத்தைத் தேடிச் சென்றவர்கள், சில நொடிகளில் மண்ணுக்குள்ளேயே புதைந்து போனார்கள்.
2026-ன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாக வெப்பத்தை கூறலாம். இந்த கோடையில் ஐரோப்பா தொடர்ச்சியாக 4 கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டது. பல இடங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியசைக் கடந்தது. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கிடைத்துள்ள தகவல்களின்படி, வெப்ப அலைகள் இடம்பெற்ற காலங்களில் வழக்கமாக நிகழ்வதைவிட 35 ஆயிரம் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நேரடியாக வெப்ப அலையால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல. கடும் வெப்பமானது இதயம் மற்றும் சுவாச நோய்கள் போன்ற ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்குவதாலும் நிகழ்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
அடுத்து வெனிசுலாவில் ஜூன் 24-ந்தேதி சில நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டை உலுக்கின. குறிப்பாக கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 6,125 பேர் உயரிழந்தனர். சுமார் 61,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 2026-இல் இதுவரை பதிவான மிகக் கொடிய நிலநடுக்கப் பேரழிவு இதுவாகும்.
ஆகஸ்ட் 15 அன்று இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியை 7.7 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொடர் அதிர்வுகள் பதிவாகின. குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்; 73,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன; சுமார் 180,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த பேரழிவுகளின் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது நேபாள – திபெத் எல்லையின் இமயமலைப் பேரழிவு. இதில் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 26-ந்தேதி லாங்டாங் லிருங் அருகிலுள்ள பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்து, நூற்றுக்கணக்கான மீட்டர் கீழே பள்ளத்தாக்கில் சரிந்தது. பனி, பாறை, சேறு ஆகியவை பெரும் பனிப்பாறைச் சரிவாக மாறி ஆற்றுக்குள் பாய்ந்தன. பின்னர் அது பலத்த திடீர் வெள்ளமாக மாறி பொங்கிவந்து கிராமங்கள், வீடுகள், பாலங்கள், மின் திட்டங்களை அடித்துச் சென்றது.
ஆரம்பத்தில் இது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இது நிலநடுக்கத்தால் உருவானது அல்ல; பனிப்பாறையும் பாறைகளும் பெருமளவில் சரிந்ததால் உருவான அதிர்வே நிலநடுக்கம் போல பதிவானது என்று தெளிவுபடுத்தியது.
உலகம் எதை நோக்கி செல்கிறது. ஒருகாலத்தில் இயற்கையின் ஓட்டத்தில் பயணித்த ஆறுகள், இன்று மனிதனின் திட்டங்களுக்கேற்ப கட்டுப்படுத்தப்படுகின்றன. மலையைக் குடைந்து சாலைகள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக மலைப்பகுதிகளில் கட்டுமானங்கள் பெருகுகின்றன. இயற்கையை வெல்லலாம் என்று நினைத்த மனிதனின் தந்திரம், இயற்கை சீற்றத்தின் முன் தவிடு பொடியாகிறது. இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.