

மருந்துகளின் விலையைக் குறைக்கும் அதே வேளையில், சந்தையில் அவற்றின் தட்டுப்பாடு ஏற்படாமல் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசு அனைத்து பட்டியலிடப்படாத புற்றுநோய் தடுப்பு மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை அதிகபட்சமாக 30 சதவீதமாக நிர்ணயித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் மூலம் நாட்டில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 2,500 கோடி வரை மருத்துவச் செலவு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் புற்றுநோய் மருந்துகளின் மிக அதிகபட்ச விலையேற்றம் குறித்து உச்ச நீதிமன்றம் தனது கவலை தெரிவித்திருந்தது. மருந்து விற்பனையாளர்களுக்கு ரூ.2,700-க்கு விநியோகிக்கப்படும் ஒரு மருந்து, நோயாளிகளுக்கு 10 மடங்கு அதிகமாக ரூ.27,000 என்ற அச்சிடப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். மருத்துவத் துறையில் நிலவும் இத்தகைய அதிகப்படியான லாப கொள்ளையைத் தடுத்து, அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியது.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருந்துகள் துறை வெளியிட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடானது, பரந்த அளவிலான புற்றுநோய் மருந்துகளுக்குப் பொருந்தும்:
* பிராண்டட் மற்றும் ஜெனரிக் மருந்துகள்
* உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்
* காப்புரிமை பெற்ற மற்றும் காப்புரிமை பெறாத மருந்துகள்
இதன் கீழ் 110 முக்கிய புற்றுநோய் மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. விநியோகச் சங்கிலியில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் எடுக்கும் அதிகப்படியான லாப வரம்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான சிகிச்சையின் போது, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கையில் இருக்கும் சேமிப்பு முழுவதையும் செலவிட வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர். அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விலை வரம்பு கட்டுப்பாடு, புற்றுநோயாளிகளின் நேரடிச் செலவைக் கணிசமாகக் குறைத்து, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை அளிக்கும்.
மருந்துகளின் விலையைக் குறைக்கும் அதே வேளையில், சந்தையில் அவற்றின் தட்டுப்பாடு ஏற்படாமல் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக 2019 ஆம் ஆண்டில் 526 பிராண்டட் புற்றுநோய் மருந்துகளுக்கு எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கையின் மூலம் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 984 கோடி மிச்சமானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விரிவான உத்தரவு மூலம் ஏழை எளிய மக்களுக்கும் புற்றுநோய் சிகிச்சை மேலும் எளிதில் கிடைக்கக்கூடியதாக மாறும்.