பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல அனுமதி மறுப்பு: மாற்றுப் பாதையை தேடும் ரஷிய நிறுவனம்!

இதற்கான சரியான காரணத்தைப் பாகிஸ்தான் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
 Rooppur Nuclear Power Plant
Published on: 
Summary

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் இது குறித்து தெரிவிக்கையில், தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணத்தினாலேயே அனுமதி தாமதமானதாகக் கூறியுள்ளது.

பங்களாதேஷ் நாட்டின் முதலாவது அணுமின் நிலையமான 'ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கு' தேவையான இரண்டாம் கட்ட அணு எரிபொருளைச் சுமந்து கொண்டு ரஷியாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு சரக்கு விமானத்திற்குத் தன் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்து பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

பங்களாதேஷில் கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில், ரூப்பூர் அணுமின் நிலையத்தின் பணிகளை விரைந்து முடித்து மின் உற்பத்தியைத் தொடங்க அந்நாடு தீவிரம் காட்டி வந்தது. செப்டம்பர் 24-ஆம் தேதியன்று பங்களாதேஷை வந்தடைய வேண்டிய இந்த அணு எரிபொருள் சரக்கு, பாகிஸ்தானின் கடைசி நேர அனுமதியின்மையால் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாமல் போயுள்ளது.

ரஷியாவின் 'ரோசாட்டம்' நிறுவனம் தயாரித்த இந்த அணு எரிபொருள் அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகத் டாக்காவை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் அனைத்துப் தயாரிப்புகளும் பூர்த்தியடைந்த நிலையில், பாகிஸ்தான் தன் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததை ரஷிய நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் இது குறித்து தெரிவிக்கையில், தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணத்தினாலேயே அனுமதி தாமதமானதாகக் கூறியுள்ளது. இருப்பினும், பங்களாதேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான சரியான காரணத்தைப் பாகிஸ்தான் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. சமீபகாலமாக பாகிஸ்தானுடன் நல்உறவை ஏற்படுத்த பங்களாதேஷ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அந்நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய ராஜதந்திர பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மாற்றுப் பாதை

பாகிஸ்தானின் தடையைத் தொடர்ந்து, ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான 'ரோசாட்டம்' தற்போது மாற்றுப் பாதை வழியாக அணு எரிபொருளை பங்களாதேஷிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மாற்றுப் பாதையில் இந்த எரிபொருள் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டு, டிசம்பர் மாதத்திற்குள் ஏழு தனித்தனி சரக்கு விமானங்கள் மூலம் மீதமுள்ள எரிபொருட்கள் அனைத்தும் டாக்காவை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாமதத்தால் மின் நிலையத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு அட்டவணை பாதிக்கப்படாது என்று ரஷ்ய நிறுவனம் உறுதியளித்துள்ள போதிலும், கடுமையான மின்சார நெருக்கடியில் இருக்கும் பங்களாதேஷிற்கு இந்தத் தடை தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com