காதலுக்காக உலகைச் சுற்றிய 69 வயது முதியவர் - 30,000 கி.மீ சைக்கிள் பயணம் செய்து கின்னஸ் சாதனை!

உடலளவிலும் மனதளவிலும் புதிய சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும், இல்லையெனில் நாம் இறந்து கொண்டிருக்கிறோம் - மார்க் ஹெர்ப்ஸ்ட்
Mark Herbst
Published on: 
Summary

தனது மறைந்த மனைவியின் நினைவாகவும், புற்றுநோய் விழிப்புணர்விற்காகவும் 69 வயது கனடா நாட்டு முதியவர் ஒருவர் 324 நாட்களில், 25 நாடுகளைக் கடந்து, சுமார் 30,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு புதிய உலகக் கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

மனைவியின் மரணமும் சபதமும்

கனடாவைச் சேர்ந்த மார்க் ஹெர்ப்ஸ்ட் (69) என்பவரின் மனைவி ஜாக்கி , கடந்த 2021ம் ஆண்டு தனது 55-வது வயதில் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். தீவிர விளையாட்டு வீராங்கனையான அவர், 7 ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துயரத்திலிருந்து மீள முடியாத மார்க், தனது சோகத்தையே தனது இலட்சியத்திற்கான எரிபொருளாக மாற்றிக் கொண்டார்.

முதியவர்களாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவும், ஆரோக்கியம் இருக்கும் போதே வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகைச் சைக்கிளில் வலம் வர அவர் முடிவு செய்தார்.

324 நாள் உலகப் பயணம்

கடந்த 2025 ஜனவரி 8 அன்று தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலிருந்து தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கிய மார்க், ஆஸ்திரேலியா, தெற்காசியா, மத்திய ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வழியாகப் பயணித்தார்.

தனது பயணத்தின் போது, தானும் தன் மனைவியும் வாழும்போது செல்ல நினைத்த உலகப் புகழ்பெற்ற இடங்களில், மனைவியின் அஸ்தியைக் தூவித் தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

இறுதியாக, 324 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, கடந்த 2025 நவம்பர் 27 அன்று மீண்டும் பாங்காக்கிற்கு வந்தடைந்தார். இதன் மூலம், 'உலகைச் சைக்கிளில் சுற்றிவந்த மிக வயதான நபர்' என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பென்னட் (வயது 66) என்பவர் வைத்திருந்த சாதனையை மார்க் முறியடித்துள்ளார்.

ரூ.57 லட்சம் நிதி உதவி

மார்க் தனது உலகப் பயணத்தின் மூலம் புற்றுநோய்க்கு எதிரான போருக்காகப் பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டளைக்கு சுமார் 67,746 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57 லட்சம்) நிதியாகத் திரட்டி வழங்கியுள்ளார்.

தன் குடும்பம் அனுபவித்த வலியை வேறு எந்தக் குடும்பமும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார்.

நெகிழ வைத்த மனிதநேயம்

தனது பயணம் குறித்து மார்க் கூறுகையில், "உலகில் பெரும்பாலான மக்கள் மிகவும் அன்பானவர்கள். மலேசியாவில் போலீசார் எனக்குப் பாதுகாப்பு அளித்து, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்காக வீடியோ எடுத்து உதவினர்.

ஆஸ்திரேலியாவில் கஃபே நடத்தும் பெண்மணி ஒருவர், முகம் தெரியாத எனக்குத் தனது கஃபேயிலேயே தங்குவதற்கு இடம் கொடுத்தார். பல மனிதர்கள் எனக்கு உணவளித்து, வீடுகளில் தங்க வைத்து உதவினர்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

கின்னஸ் சாதனைப் படைத்துள்ள மார்க், தற்போது தனது பயண அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். "நாம் தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் புதிய சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும், இல்லையெனில் நாம் இறந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்" என்ற உன்னத செய்தியோடு தனது ஓய்வு காலத்தை அவர் மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com