செங்கலுக்கு கல்லால் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை - ஹவுதிகளுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

சவுதியின் தெற்கு நகரங்கள் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Pakistan warns Houthis
Published on
Summary

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஹவுதிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மெக்கா பாதுகாப்பு கூட்டணி

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கடந்த மாதம் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மெக்கா பாதுகாப்பு கூட்டணி என்ற அமைப்பு ஒன்றை தொடங்கினர்.

இந்த அமைப்பின் மூலம், மூன்று உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு மற்ற உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

தாக்குதல் சம்பவம்

இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை அன்று சவுதி விமானப்படை தளம் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி அமைப்புகள் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதையடுத்து சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களான அப்ஹா, கமிஸ் முஷைத் மற்றும் ஜசான் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இந்த நிலையில் ஏமனில் நிலவும் தாக்குதல் சம்பவம் சவுதி அரேபியாவின் எல்லைக்குள் பரவினால், மெக்கா பாதுகாப்பு கூட்டணியின் சார்பில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இது ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.

இந்த கூட்டணியில் உள்ள ஒரு உறுப்பு நாட்டிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு நடந்தால், மூன்று உறுப்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தொடர்ந்தால், ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கான இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களை அரசு சாரா சக்திகள் என்றும், அமெரிக்காவுடனான தற்போதைய மோதலில் ஈரானின் நிலைப்பாட்டிற்கு ஏமன் உட்பட இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் அனுதாபம் நிலவுகின்றது.

இவ்வாறு இருக்கும்போது அந்த உணர்வுகளை கெடுத்து மோதலை விரிவுபடுத்த அனுமதிக்க வேண்டாம். ஒவ்வொரு தாக்குதலுக்கும் ராணுவ நடவடிக்கை அவசியமின்றி மெக்கா கூட்டணி ஒரு தடுப்பாகச் செயல்பட முடியும்.

செங்கலுக்குக் கல்லால் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியின் ஒருங்கிணைந்த ராணுவத் திறன்களே ஒரு தடுப்பாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியாவின் மீதான ஹவுதி தாக்குதல்களை, கோழைத்தனமானவை என்று கூறினார்.

மேலும் சவூதி அரேபியாவுடன் பாகிஸ்தான் தளராத ஒற்றுமையுடன் நிற்பதாகவும், அந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை மீண்டும் தங்கள் நாடு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹவுதி குற்றச்சாட்டு

ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமன் பகுதிகளில், சவூதி சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அல் ஹஸ்ம் நகரில் உள்ள சிறைச்சாலை மீது சவூதி அரேபியா குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com