

போட்டிக்கு பதிலாக ஒத்துழைப்பின் மூலம் நமது எதிர்காலத்தை வடிவமைக்கப்பது அவசியம் என பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
அதில் உறையற்றிய அவர், "இந்தியாவின் வளர்ச்சியும் ஆசியான் நாடுகளின் செழிப்பும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன
இந்தியாவும் ஆசியான் நாடுகளும் இணைந்து உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருகின்றன.
இந்தச் சூழலில், போட்டிக்கு பதிலாக ஒத்துழைப்பின் மூலம் நமது எதிர்காலத்தை வடிவமைப்பது மிகவும் முக்கியம்.
வரும் ஆண்டுகளில் நமது பொதுவான லட்சியங்களை நனவாக்குவதில் 'வளர்ந்த இந்தியா 2047' மற்றும் 'ஆசியான் சமூக தொலைநோக்கு 2045' ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்.
'கிழக்கு நோக்கிய செயல்' (Act East Policy) கொள்கை, இந்தியா-ஆசியான் உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
நமது கூட்டாண்மை கலாச்சார பாரம்பரியத்துடன் மட்டும் நின்றுவிடாமல், டிஜிட்டல், பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற புதிய துறைகளுக்கும் விரிவடைந்து வருகிறது.
2014ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த 100க்கும் மேற்பட்ட முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், சுமார் 250 திட்டங்கள் தொடங்கப்பட்டு, 10,000க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் தற்போது பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. முன்னெப்போதையும் விட அமைதியும் ஸ்திரத்தன்மையும் தேவைப்படகிறது.
இந்தச் சூழலில், இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளான 'நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம்' என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது." என தெரிவித்தார்.
மேலும் மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியருக்கு மோடி வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று இரவு அதிபர் அளித்த இரவு விருந்தில் பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையணிந்து பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.