

கவர்னரை சந்தித்த பின்பு 19 எம்.எல்.ஏ.க்களும் பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு திரும்பினர்.
அங்கு டி.டி.வி.தினகரனுடன் ஆலோசனை நடத்தினார்கள். 2 மணி நேரம் ஆலோசனை நடந்தது. அதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டோம். அவரை மாற்ற வேண்டும். நாங்கள் 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து இது தொடர்பாக கடிதம் கொடுத்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆட்சிக்கு துரோகம் செய்தவர். தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டவர்.
ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த போது நாங்கள் 122 எம்.எல்.ஏ.க்களும் சசிகலா சொன்னதால் வாயை கட்டி, கையை கட்டி, வயிற்றை கட்டி பசியோடு சட்டமன்றத்தில் காத்திருந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தோம்.
இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முயற்சி செய்த ஓ.பன்னீர் செல்வத்தின் காலில் விழுந்து அவரை அழைத்து வந்து துணை முதல்-அமைச்சர் பதவி கொடுப்பதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது. அதற்கு என்ன காரணம்?
நாங்கள் எல்லோரும் சேர்ந்து தானே எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தோம். இப்போது ஒரு மரியாதைக்காவது எங்களையும் அழைத்து ஆலோசித்து இருக்க வேண்டாமா? எடப்பாடி அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று அறிவித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது அவரை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள். எவ்வளவோ இடையூறுகளுக்கு இடையேதான் நாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினோம்.
ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்-அமைச்சர் ஆகவோ, ஏன் முதல்- அமைச்சராக கூடவோ ஆக்குங்கள். ஆனால் உங்களை முதல்வராக்கிய சசிகலாவை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருவதாக சொல்கிறீர்களே அதுதான் மிகப்பெரிய வேதனையாக உள்ளது. எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான். நிச்சயம் தண்டனை உண்டு.
கேள்வி:- உங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறுகிறீர்களே? நீங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரா?
பதில்:- நாங்கள் எப்போது இல்லை என்று சொன்னோம்.
கே:- உங்களிடம் 19 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். இதில் கவர்னர் எப்படி தலையிட முடியும். முதல்-அமைச்சரை மாற்றுவது கவர்னரின் கடமை இல்லையே, எந்த அடிப்படையில் கவர்னர் உதவியை நாடுகிறீர்கள்?
ப:- எல்லாம் தெரிந்து தான் கவர்னரிடம் முதல்- அமைச்சரை மாற்றக்கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையை இழந்து விட்டார். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு வர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மை பலம் இருந்தால்தான் அவர் ஆட்சியில் நீடிக்க முடியும். நாங்கள் புதிய முதல்-அமைச்சரை தேர்வு செய்வோம்.
கே:- எப்போது தேர்வு செய்வீர்கள்?
ப:- எப்படி, எப்போது புதிய முதல்வரை தேர்வு செய்வோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.