18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சட்டரீதியாக சபாநாயகர் நடவடிக்கை தவறு: விஜயதரணி

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சட்டரீதியாக சபாநாயகர் நடவடிக்கை தவறு என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சட்டரீதியாக சபாநாயகர் நடவடிக்கை தவறு: விஜயதரணி
Published on

நாகர்கோவில்:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்து இருப்பது சட்டரீதியாக தவறு. சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தகுதி நீக்கம் செய்தவர்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள். அங்கு அந்த வழக்கு தள்ளுபடி ஆகலாம்.

18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவவில்லை. கொறடா உத்தரவை மீறவும் இல்லை. அப்படியிருக்க அவர்களை நீக்கம் செய்திருப்பது சட்டரீதியாக தவறு என்றே கருதுகிறேன். இவர்களை தகுதி நீக்கம் செய்திருப்பது மூலம் எடப்பாடி தலைமையிலான அரசு இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தொடரலாம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கோர்ட்டை அணுகி தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்ற உத்தரவை பெற்று வந்தால் அவர்கள் அனைவரும் எடப்பாடி அரசுக்கு எதிராக முடிவெடுப்பார்கள். அப்போது அந்த ஆட்சி கவிழும். ஒருவேளை நீதிமன்றம் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் சரிதான் என்று முடிவெடுத்து அறிவித்தால் இந்த 18 தொகுதிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும். அப்போது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அந்த தொகுதிகள் அனைத்திலும் நிச்சயம் வெற்றி பெறும். இதன் மூலம் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும்.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் ஜெயலலிதா இருந்தபோது கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்கோப்பாக வழிநடத்தினார். ஆனால் இப்போது அங்கு வலிமையான தலைவர் இல்லை. இதனால் குழப்பமும், கோஷ்டிபூசலும் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com