

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளில் நமது நாட்டில் 330 பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறார். 4 கண்டங்களில் உள்ள 19 நாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறார்.
பனாமா, கவுதிமாலா, கோஸ்டரிக்கா, மால்டா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த முதல் இந்திய துணை ஜனாதிபதி என்ற பெருமை அவருக்கு உண்டு. மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
61 பட்டமளிப்பு விழாக்களில் உரை நிகழ்த்தி இருக்கிறார். 25 சிறப்பு சொற்பொழிவு ஆற்றி உள்ளார். மாணவ-மாணவிகளுடன் 35 நிகழ்ச்சிகளில் கலந்துரையாடி இருக்கிறார். பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு 97 முறை வருகை புரிந்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த இப்பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிடுகிறார்.