

வாஷிங்டன்:
பாகிஸ்தானின் முக்கிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக அமெரிக்க கடற்படை இணை தலைவர் ஜெனரல் ஜோசப் டன்போர்ட் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செனட் ஆயுத சபை கமிட்டி நேற்று கூடியது. இதில், பாதுகாப்பு துறையின் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய கடற்படை இணை தலைவர் ஜெனரல் ஜோசப் டன்போர்ட், “எனது பார்வையில் பாகிஸ்தானின் முக்கிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெளிவாக இருக்கிறது” என்று பேசினார்.
இதற்கு முன்னதாகவும், அமெரிக்க உயரதிகாரிகள் பலர், தாலிபான், ஹக்கானி உள்ளிட்ட பல தீவிரவாத இயக்கங்களுக்கு ஐ.எஸ்.ஐ அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.