டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்- டிடிவி தினகரன் பேட்டி

2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Published on

தூத்துக்குடி:

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துரோகத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகத்தை பற்றி பேசுகிறார். அவர் பொய்யை உண்மையாக்க பேசுவார். அவர் செய்யும் தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழியை போடுவார். உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களிடம் எதற்கு பணம் வசூலிக்க வேண்டும். அ.ம.மு.க. இந்த தேர்தல் மட்டும் அல்ல, எந்த தேர்தலிலும் போட்டியிடுபவர்கள் யாரிடமும் பணம் வசூல் செய்ய போவது கிடையாது.

3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அ.தி.மு.க. எப்படி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியில் இருக்கிறதோ, அதே போன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்றைக்கு ஜனநாயக படுகொலை நடந்து உள்ளது. 

மகாராஷ்டிரா மாநில பிரச்சினை குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்து உள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை தங்களுக்கு சாதகமாக நடந்தால் வாயை மூடிக்கொண்டு இருக்கும். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எதற்கும் தயாரான கட்சி தி.மு.க. தான். எனவே, அவர்களின் நிலைப்பாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை.

எனக்காக ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்தவர்கள், தற்போது பதவி இருக்கிறது என்ற தைரியத்தில் எதை வேண்டுமானாலும் பேசுகின்றனர். இதற்கு காலம் பதில் சொல்லும். தேர்தலில் அ.ம.மு.க. பதிவு செய்யப்படவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவோம். 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com