ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?

ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல.
orangutan infants
Published on
Summary

வனத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் போகராய் பகுதியில் உள்ள ரணகதா வனப்பகுதியில், மரக்கிளைகளில் ஐந்து சிறிய விலங்குகள் தாவி விளையாடுவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு அந்த 5 விலங்குகளையும் பாதுகாப்பாக மீட்டனர். அப்போதுதான் மீட்புக் குழுவினருக்கு அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது. மீட்கப்பட்ட ஐந்து விலங்குகளும் இந்திய காடுகளில் காணப்படாத அரிய வகை 'ஒராங்குட்டான்' குட்டிகள் என்பது தெரியவந்தது.

தென்கிழக்கு ஆசியாவின் பூர்வீகம்

ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல. இவை இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. இவை தானாக வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைய எவ்வித இயற்கை வழியோ அல்லது வனப்பாதை இணைப்போ கிடையாது. சர்வதேச அளவில் மிகக் கடுமையாக அழிவின் விளிம்பில் உள்ள இந்த உயிரினங்கள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பல் மூலம் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பலமான சந்தேகம் எழுந்துள்ளது.

போலீஸ் சோதனைக்கு அஞ்சி கைவிடப்பட்டதா

வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 16-க்கு அருகே இவை மீட்கப்பட்டுள்ளதால், சோதனைச் சாவடிகள் அல்லது காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்கு அஞ்சிய கடத்தல்காரர்கள், பிடிபடாமல் தப்பிப்பதற்காக இந்த குட்டிகளை வனப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் ஒரு ஒராங்குட்டான் குட்டியின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்பதால், பெரிய அளவிலான சட்டவிரோத நெட்வொர்க் இதன்பின்னால் இயங்கி வரலாம்.

நந்தன்கானன் உயிரியல் பூங்காவுக்கு மாற்றம்

மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகளில் 2 பெண் மற்றும் 3 ஆண் குட்டிகள் அடங்கும். வனத்துறை கால்நடை மருத்துவக் குழு உடனடியாக அவற்றுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டு, பழங்கள் மற்றும் நீர்ச்சத்து பானங்களை வழங்கி பராமரித்து வருகிறது. நான்கு குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில், ஒரு குட்டிக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்காலிகப் பராமரிப்பிற்குப் பிறகு, இந்த ஐந்து குட்டிகளும் புபனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற 'நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்கு' கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட உள்ளன.

இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஒடிசா மாநில வனத்துறை மத்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவின் உதவியை நாடியுள்ளது. மாநில வனத்துறையின் சிறப்புப் படையும், WCCB அதிகாரிகளும் இணைந்து சர்வதேச கடத்தல் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வேறு ஏதேனும் அரிய வகை விலங்குகள் கைவிடப்பட்டுள்ளதா என்பதை அறிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com