GLOBAL MARKET: செமிகண்டக்டர் நிறுவனங்களின் அதிரடி லாபத்தால் சீனா மற்றும் ஹாங்காங் பங்குகள் கிடு கிடு உயர்வு!

தொழில்நுட்ப பங்குகள் ஏற்றம் கண்ட போதிலும், நுகர்வோர் மற்றும் மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
GLOBAL MARKET
Published on

சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகளில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள், குறிப்பாக செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. செமிகண்டக்டர் நிறுவனங்கள் வெளியிட்ட சிறப்பான அரையாண்டு நிதி முடிவுகள் மற்றும் அதிகரித்த லாபம் ஆகியவையே இந்த திடீர் உயர்வுக்கு முதன்மைச் சான்றாக அமைந்துள்ளன. இதன் விளைவாக ஆசிய பங்குச்சந்தைகளில் செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பங்குகளின் வர்த்தகம் விறுவிறுப்படைந்துள்ளது.

சீன பங்குச்சந்தை

சீன சந்தையின் முன்னணி பங்குச்சந்தை குறியீடான ஷாங்காய் காம்போசிட் வர்த்தகத்தின் இடையே 0.8 சதவீதம் உயர்ந்து 3,960.19 புள்ளிகளை எட்டியது. அதேபோல ப்ளூ-சிப் சிஎஸ்ஐ 300 குறியீடும் 0.8 சதவீத உயர்வைச் சந்தித்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஷாங்காயின் 'ஸ்டார் 50' குறியீடு 3 சதவீதமும், சிஎஸ்ஐ செமிகண்டக்டர் குறியீடு 4 சதவீதமும் உயர்ந்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன.

லாப விவரங்கள்

நினைவக சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 'சிஎக்ஸ்எம்டி' நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. மேலும் 'ஷென்சென் சீனா மைக்ரோ செமிகண்டக்டர்' நிறுவனம் தனது முதல் அரையாண்டு லாபம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து கடந்த ஒரு மாத கால அளவில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நுகர்வோர் துறையில் நிலவும் சரிவு

தொழில்நுட்ப பங்குகள் ஏற்றம் கண்ட போதிலும், நுகர்வோர் மற்றும் மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. சிஎஸ்ஐ மதுபான குறியீடு 3.3 சதவீதம் சரிவடைந்தது. நாட்டின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான குவைச்சோவ் மௌடாய் தனது லாபத்தில் வீழ்ச்சியைச் சந்தித்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அதன் பங்கு மதிப்பு 4.2 சதவீதம் சரிந்தது. இதன் காரணமாகவே சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங் சந்தை

ஹாங்காங் பங்குச்சந்தையில் ஹேங் செங் குறியீடு 1.6 சதவீதம் உயர்ந்து 25,521.99 புள்ளிகளாகப் பதிவானது. சீன நாட்டின் தொழில் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை தொடர்பான முக்கிய பொருளாதார தரவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் சந்தையை கூர்ந்து கவனித்து வருகின்றனர். உள்நாட்டு தேவை மற்றும் கடன் சந்தையின் ஸ்திரத்தன்மை குறித்து இந்த தரவுகள் தெளிவான பார்வையை வழங்கும் என்பதால் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகளுக்கு இடையே முதலீடுகள் மாறி வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com