

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் வானியலாளர்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் புதிய வகை விண்வெளிப் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சம் உருவாகி நூறு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகான தொடக்க காலத்தில் இந்த விசித்திரமான பொருள் காணப்பட்டுள்ளது.
நமது சூரிய மண்டலத்தின் அளவுக்குப் பிரம்மாண்டமான ஒரு பெரிய நட்சத்திரத்தைப் போல தோற்றமளிக்கும் இது, சாதாரண நட்சத்திரங்களை விட சுமார் 100 பில்லியன் மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த பிரம்மாண்ட ஆற்றல் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில், இதற்கு "கருந்துளை நட்சத்திரம்" என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
பொதுவாக நட்சத்திரங்கள் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்குகின்றன. ஆனால், இந்த புதிய பொருளின் ஆற்றல் உற்பத்தி ஒரு சாதாரண நட்சத்திரத்தால் சாத்தியமில்லாத அளவுக்குப் பிரம்மாண்டமாக உள்ளது. விஞ்ஞானி ரோஹன் நாயுடு தலைமையிலான ஆய்வுக் குழுவினர், இதன் மையத்தில் சூரியனை விட 1,00,000 மடங்கு அதிக நிறை கொண்ட ஒரு பெரிய கருந்துளை இருக்கக் கூடும் என்று கூறியுள்ளனர்.
அந்தக் கருந்துளையைச் சுற்றி சூரிய மண்டலத்தின் அளவிற்கு ஹைட்ரஜன் வாயுக்கள் அடர்த்தியான மேகம் போல சூழ்ந்து, ஒரு பெரிய நட்சத்திரத்தின் வளிமண்டலம் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளன.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தொடக்கால பிரபஞ்சத்தின் படங்களில் பல சிறிய சிவப்பு புள்ளிகள் காணப்பட்டு வந்தன. அவை என்னவென்று தெரியாமல் பல ஆண்டுகளாக வானியலாளர்கள் இடையே பெரும் விவாதம் நடந்து வந்தது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'MoM-BH-1' என பெயரிடப்பட்ட இந்த கருந்துளை நட்சத்திரம், அந்த சிவப்பு புள்ளிகள் அனைத்தும் எவ்வாறு உருவாகின என்ற புதிருக்கு முக்கிய விடையாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் பிரபல 'நேச்சர்' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் ராட்சத கருந்துளைகள் எப்படி இவ்வளவு விரைவாக உருவாயின என்பதைப் புரிந்து கொள்ள இந்த "கருந்துளை நட்சத்திரம்" பற்றிய கண்டுபிடிப்பு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.