விண்வெளியில் அதிகரித்து வரும் ஆபத்தான குப்பைகளைக் கண்காணித்து விண்கலன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீனா தனது முதல் வணிக ரீதியிலான 'கண்டே' செயற்கைகோள் நெட் வொர்க் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதற்கான முதல் செயற்கைகோள், வடமேற்கு சீனாவிலிருந்து 'லிஜியான்-1' என்ற வணிக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
கண்டே திட்டம் என்பது சீனாவின் விண்வெளிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான விண்வெளிக் கண்காணிப்பு வலையமைப்பாகும்.
விண்வெளியில் அதிவேகமாகச் சுற்றி வரும் ஆபத்தான விண்வெளிக் குப்பைகளைக் கண்காணிப்பதும், புவியின் அனைத்து வகையான வட்டப்பாதைகளிலும் உள்ள விண்கலன்கள் மற்றும் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து கண்காணிப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
குறிப்பாக, சீனா வேகமாக ஏவி வரும் வணிகரீதியான பெரும் செயற்கைக்கோள் கூட்டங்கள் விண்வெளிக் குப்பைகளுடன் மோதி சேதமடையாமல் தடுத்து, ஒட்டுமொத்த விண்வெளிப் பயண விபத்துகளைத் தவிர்த்துப் பாதுகாப்பதில் இத்திட்டம் ஒரு முக்கியப் பின்னணியாகச் செயல்படுகிறது.
இந்த நெட்வொர்க் சீனாவின் விண்வெளிப் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துகிறது.
'கண்டே' திட்டத்தின் செயற்கைகோள் நிலைநிறுத்தும் உத்திகள் படி, ஒட்டுமொத்தமாக 120 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த முழு நெட்வொர்க்கும் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் மூன்று முக்கிய கட்டங்களாக விண்வெளியில் முழுமையாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டத்தில் (LX630), 14 செயற்கைக்கோள்கள் மட்டும் முதலில் அனுப்பப்பட்டு, அவை பூமியின் கீழ் வட்டப்பாதையில் உள்ள விண்வெளிப் பொருட்கள் மற்றும் குப்பைகளை முழுமையாகக் கண்காணித்துப் பட்டியலிடும் பணியைச் செய்யும்.
சீனாவின் வணிக விண்வெளித் துறையில் விண்வெளிக் குப்பைகளைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக வசதி இதுவரை இல்லாமல் இருந்த பெரிய குறையை இத்திட்டம் முழுமையாக நிவர்த்தி செய்கிறது என்றும், இது ஒரு முக்கிய மைல்கல் என்றும் இதன் தலைமைப் பொறியாளர் ஃபான் வெய் தெரிவித்துள்ளார்.
'கண்டே' திட்டத்தின் அதிநவீன தொழில்நுட்பப் புரட்சி படி, விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இதன் முதல் செயற்கைக்கோளில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் ஏஐ கணினி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம், பூமியிலிருந்து தரைக்கட்டுப்பாடு மையத்தின் தலையீடு மிகக் குறைவாக இருந்தாலும், செயற்கைகோள் தனது சுயக் கட்டுப்பாட்டுடன் தானாகவே வழக்கமான கண்காணிப்பு, அவசரக்கால நடவடிக்கைகள் மற்றும் அதிவேகத் தேடுதல் பணிகளைச் செய்யும் திறன் பெற்றுள்ளது.
மேலும் விண்வெளிக் குப்பைகளை மிக அருகில் சென்று உற்று நோக்குவதற்கும், பிற விண்வெளிச் செயல்பாடுகளுக்கும் தகுந்தபடி தனது வட்டப்பாதையைத் தானே மாற்றிக் கொள்ளும் பாதை மாறும் திறனும் இந்த அதிநவீன செயற்கைக்கோள்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக் குப்பைகளால் சீனா சந்தித்த ஆபத்துகள் காரணமாகவே தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையக் காலங்களில் சீனா தனது விண்வெளிப் பயணங்களில் குப்பைகளால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, ஷென்சோ-20 விண்கலத்தின் திரும்பும் காப்ஸ்யூல் பகுதியில் உள்ள ஜன்னல் விண்வெளிக் குப்பைகளால் தாக்கப்பட்டது, இதனால் விண்வெளி வீரர்கள் திட்டமிட்ட நேரத்தை விடக் கூடுதல் காலம் 'தியாங்காங்' விண்வெளி நிலையத்திலேயே தங்க வேண்டியதாயிற்று.
அதேபோல், கடந்த 2024 இல் ஷென்சோ-17 பயணத்தின்போது விண்வெளிக் குப்பைகள் மோதியதால் விண்வெளி நிலையத்தின் மையப் பகுதியில் இருந்த சோலார் பேனல்கள் பழுதடைந்தன, இதனைப் பழுதுபார்க்க விண்வெளி வீரர்கள் விண்கலத்திற்கு வெளியே வந்து இரண்டு முறை விண்வெளி நடைபயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.