த.வெ.க ஆட்சி கலைந்து விடும் என எடப்பாடி பழனிசாமி புலம்புகிறார்- கிறிஸ்டோபர் திலக்

தி.மு.க. கூட்டணியில் பயணித்தபோது பலர் நெருக்கடியான சூழலில் இருந்தனர்.
த.வெ.க ஆட்சி கலைந்து விடும் என எடப்பாடி பழனிசாமி புலம்புகிறார்- கிறிஸ்டோபர் திலக்
Published on

கொடைக்கானல்

கொடைக்கானல் அட்டு வம்பட்டியில் அமைந்துள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய செயலாளரும், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிறப்பான ஆட்சி

தமிழகத்தில் த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சி சிறப்பாக முடிந்துள்ளது. 100 நாள் சிறப்பாக ஓடியதை திரைப்படம் போல கொண்டாட கூடாது. தற்போதுள்ள அரசுக்கு பல சவால்கள் உள்ளன. பொதுமக்களிடம் விசாரிக்கும் போது ஊழல், கமிஷன் குறைந்துள்ளதாக வெளிப்படையாக கூறுகின்றனர். லஞ்சம் வாங்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு அதில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சட்டசபை நிகழ்வுகள்

சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை பெண்கள் மற்றும் இளைஞர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அரசியல் ஆர்வம் கூடி வருகிறது.

அடுத்த பிரதமர்

கடந்த சில நாட்களாக அடுத்த பிரதமர் என்ற கருத்து கணிப்பு நடத்தி விஜய் 3ம் இடம் பிடித்துள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. உண்மையில் இந்த கருத்து கணிப்புகளை நடத்துவது யார்? அதன் பின் புலத்தில் உள்ளவர்கள் யார்? இது உண்மையாக நடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இதனை த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் தங்கள் தலைவரை குஷிபடுத்தி ரீல்ஸ் வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. கூட்டணியில் பயணித்தபோது பலர் நெருக்கடியான சூழலில் இருந்தனர். தற்போது அங்கிருந்து வெளியேறி த.வெ.க. கூட்டணியில் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை விமர்சிப்பது எற்புடையது அல்ல. தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினை

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை தாமதமின்றி வழங்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவைப் போல தமிழகத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக பேசி வந்தால் சரியாக வராது.

எடப்பாடி புலம்பல்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக வெறுப்பின் உச்சத்தில் உள்ளார். அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களையே அவரால் தக்க வைக்க முடியவில்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலு நடித்த ஒரு படத்தில் தேங்காயை திருடி மற்றொரு கடை அமைத்ததைப் போல அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் முழுவதுமாக த.வெ.க. பக்கம் தாவி விடுவார்களோ என்ற அச்சம் எடப்பாடிக்கு வந்து விட்டது. அதன் காரணமாகத்தான் த.வெ.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என புலம்பி வருகிறார். அவர் எப்போது ஜோதிடரானார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com