

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது உடனடியாக வழக்கு பதிவுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாவது;
இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத சம்பவம். த.வெ.க ஆட்சியில் மிகக் கேவலமான ஒரு சம்பவத்தை இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு நடைபெற்றிருக்கிறது.
ஆட்சி தொடங்கிய நாளில் இருந்து, தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வந்தாலும், அனைத்திற்கும் உச்சமாக ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர், அதிலும் ஒரு பெண் ஆட்சியருக்கு ஏற்பட்டிருக்கிற இந்த ஆபத்தான சூழ்நிலை, தமிழ்நாட்டில் ஏறத்தாழ இந்த 77 ஆண்டு காலத்தில் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் இன்றைக்கு ஆட்சி தலைமையில் இருக்கும் விஜய். அவருக்கு கீழ் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள்.
திருப்பதி கொடை ஊர்வலம் நடைபெற்றபோது ஒரு பெண் காவலர் த.வெ.க நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். புகார் அளிக்கப்பட்டு, கைது செய்கிறார்கள்.
இந்தச் சம்பவம் நடைபெற்றது ஆதவ் அர்ஜுனா சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வில்லிவாக்கம் தொகுதியில். அன்றைய தினம் காவல் துறையினர் கைது செய்து வைத்தவரை மேலிடம் உத்தரவிட்டு விடுவிக்க சொல்கிறது.
உடனே, எல்லா த.வெ.கக்காரர்களுக்கும் தைரியம் வந்துவிட்டது. ஒரு பெண் போலீஸை அடித்தவர்களைக்கூட காவல் நிலையத்திலிருந்து விட்டுவிட்டார்கள் என்ற செய்தியைப் பார்த்த உடனே துணிச்சலாக எல்லாத் தவறையும் செய்யக்கூடிய மனப்பான்மை வந்துவிட்டது.
சாதாரண ஒரு த.வெ.க நிர்வாகியே போலீசிடம் தவறாக நடந்து கொண்டதற்கு விட்டுவிட்டார்கள் என்றால், நாம் ஒரு எம்.எல்.ஏ. ஆகவே, நாம் எதையும் செய்யலாம் என்ற திமிர்த்தனமாக, குடிபோதையிலே போய் ஒரு ஆட்சித் தலைவருக்கு கேவலமான மெசேஜ் அனுப்பி, மெசேஜ் அனுப்பியதோடு மட்டுமல்ல, இரவு நேரத்தில் முன்அனுமதி இல்லாமல் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று, குடிபோதையில் அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
அதற்கான ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த மாவட்ட ஆட்சித் தலைவருடைய கணவரே இன்று புகார் கொடுத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. காவல் துறையில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. சாதாரண பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை.
நேற்றைக்கு முன்தினம் மட்டும் 17 கொலை.
இன்று காலை மட்டும் நான்கு கொலைகள்; இது நாடா, காடா என்று தெரியவில்லை. டிஜிபி, டிஎஸ்பி இடம் மனு அளித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை.’” என தெரிவித்தார்.