அக்வான் புயல் எச்சரிக்கை: ஒடிசாவின் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; 3 ரெயில்கள் மாற்றியமைப்பு

இன்று மற்றும் நாளை தெற்கு மற்றும் வடக்கு ஒடிசா மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Cyclone Ockhi
Published on: 
Summary

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள 'அக்வான்' புயல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி மூன்று ரெயில்களின் நேர அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்கக் கடலின் மத்திய-மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள அக்வான் புயல் காரணமாக, கஞ்சம், கஜபதி, பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா மற்றும் கந்தமால் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நவம்பர் 19 முதல் 21 வரை மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்களில் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரெயில் சேவைகளில் மாற்றம்

புயல் காரணமாக மூன்று ரெயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றான சார்லப்பள்ளி - ஷாலிமார் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், வியாழக்கிழமை காலை 08:40 மணிக்குப் பதிலாக அதே நாளில் பிற்பகல் 03:40 மணிக்குப் புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அக்வான் புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபூர் மற்றும் ஒடிசாவின் பூரி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தெற்கு மற்றும் வடக்கு ஒடிசா மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 11 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; விடுப்பில் உள்ள ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 50,000 மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிவாரண முகாம்கள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

X