58 வயதில் ஓய்வு பெறுவோருக்கு இன்ப அதிர்ச்சி: பி.எஃப் பணத்தை மாதந்தோறும் எடுக்க புதிய திட்டம்!

இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பல்வேறு வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
EPFO
Published on: 
Summary

ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதித் தொகையை ஒரே மொத்தமாக எடுக்காமல், மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் தவணைகளாகப் பெறும் 'சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான்' திட்டத்தைக் கொண்டு வர ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பரிசீலித்து வருகிறது.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்தப் புதிய திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் சேமிப்புத் தொகையை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக நிர்வகிக்கவும், நிலையான வருமானத்தை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பல்வேறு வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்காமல், மாதாந்திரம், காலாண்டு அல்லது ஆண்டுத் தவணைகளாகப் பெறும் முறை அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக எடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையைத் தவணைகளாகப் பெறும் வசதியும் இடம்பெற வாய்ப்புள்ளது. அசல் தொகையை அப்படியே முதலீட்டில் வைத்துவிட்டு, அதற்குக் கிடைக்கும் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்ளும் முறையும் பரிசீலனையில் உள்ளது.

வட்டி வருமானம்

தற்போதைய விதிகளின்படி, ஓய்வு பெற்ற மூன்று ஆண்டுகளுக்குள் உறுப்பினர்கள் தங்களது முழுத் தொகையையும் எடுக்க வேண்டும்; இல்லையெனில் கணக்கு செயல்படாத நிலையை அடைந்து ஆண்டு வட்டி கிடைப்பது நின்றுவிடும். ஆனால், புதிய திட்டத்தின் மூலம் ஓய்வுக்குப் பிறகும் மீதமுள்ள தொகை தொடர்ந்து முதலீட்டிலேயே இருக்கும் என்பதால், அதற்கான வட்டி தொடர்ந்து கிடைக்கும். தேவைப்படும்போது இந்தத் திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 58 வயதில் ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களது முழுப் பி.எஃப் தொகையையும் எடுக்க முடியும். மேலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியமும் பெறலாம். இந்தப் புதிய விருப்பத் திட்டம் முதற்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6.3 லட்சம் உறுப்பினர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமையும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

X