திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
DMK MP Kanimozhi
Published on

"தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

குற்றச்சாட்டுகள் வந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோ, கைது செய்வதோ நடை பெறுவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசை எதிர்த்து...

'எதிர்ப்போம், எதிர்ப்போம்' என்று வாய் வார்த்தையாக கூறுகிறார்களே தவிர, தமிழகத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் மத்திய அரசை எதிர்த்து எதையும் அவர்கள் பேசுவதில்லை என்பதுதான் உண்மை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரோ, அமைச்சர்களோ இதுவரை மத்திய அரசை எதிர்த்து எந்த கேள்வியையும் எழுப்பியதாக எனக்கு நினைவில்லை.

2 நாட்களுக்கு முன்பு கனிம வளம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது.

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி

எந்தவிதமான விவாதமும் இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் திட்டங்களை நீட்டித்திருப்பது நிச்சயமாக வாழ்த்துக்குரியது.

தமிழகத் தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கனவாக இருக்கலாம். நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com