

கடல் பாசியில் இருந்து உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மோட்டார் உதிரிபாகங்கள், உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதற்கிடையே மானாமதுரையை அடுத்த கீழப்பசலை அருகேயுள்ள பனிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜேசுதாஸ் (வயது 34) என்பவர் அதே சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடல்பாசியில் இருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வளர்மதி என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த ஜேசுதாஸ் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் வீரியம் வாய்ந்த ஆசிட்டை கையாண்டு கொண்டிருந்தார். அப்போது ஆசிட் கசிந்து அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனடியாக அந்த பகுதியில் பணியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இருந்தபோதிலும் ஜேசுதாஸ் அதிக அளவில் விஷ வாயுவை சுவாசித்ததால் ஒருசில விநாடிகளில் அவர் அங்கு மயங்கி விழுந்தார். இதையடுத்து விைரந்து வந்த சக ஊழியர்கள் அசைவற்று கிடந்த ஜேசுதாஸ் அருகில் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த மானாமதுரை சிப்காட் போலீசார் விஷ வாயு தாக்கி உயிரிழந்த ஜேசுதாசின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடல் பாசியில் இருந்து உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.