

மதுரை முன்னாள் துணை மேயர் மற்றும் அதிமுக நிர்வாகியான பி.எம். மன்னனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார், நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்றே கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஒருநாள் முன்னதாகவே அவர் கைது செய்யப்பட்டதற்கு என்ன காரணம், யார் அழுத்தத்தின் பேரில் இது அரங்கேற்றப்பட்டது? என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனுக்கு BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நாளை (07.11.2026) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஆனால், அவர் நாளை விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே இன்று காலை அவரைக் அவசரமாக கைது செய்திருப்பது ஏன்?
Satender Kumar Antil v. CBI (15.01.2026) வழக்கில், 7 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய குற்றங்களில் BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நோட்டீஸ் வழங்குவதே விதி; கைது என்பது விதிவிலக்கு என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நோட்டீஸ் வழங்கிவிட்டு, அவர் ஆஜராக தயாராக இருந்தும், ஆஜராக வாய்ப்பு அளிக்காமல் ஒரு நாளுக்கு முன்பே அவரை கைது செய்திருப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் BNSS சட்டத்தின் நோக்கத்திற்கும் முரணானதல்லவா?
இந்தக் கைது எதற்காக? யாருடைய அழுத்தத்தின் பேரில் இந்த நடவடிக்கை?
சட்டங்களும், நீதிமன்ற தீர்ப்புகளும் தவெக அரசை கட்டுப்படுத்தாதா?
தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது எதேச்சதிகாரத்தின் ஆட்சியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.