

திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய், மிசா சட்டம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் இந்த பேச்சைக் கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எதிர்தரப்பினரின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடிகளை வழங்கி ஆவேசமாக உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேசுகையில், சட்டமன்றத்திற்குள் வந்து எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு திமுகவை நோக்கி கேள்வி கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று சாடினார். "மிசா சட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? திமுகவை பார்த்து கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது? சட்டமன்றத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்று அமைச்சர்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ முறையான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. பயிற்சி வகுப்புகள் நடத்தியும் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்வது வேடிக்கையானது" எனத் தெரிவித்தார்.
திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார் என்று மேயர் பிரியா விமர்சித்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் அண்ணா, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் வளர்த்தெடுக்க ஆற்றிய பங்களிப்பை இந்த மாநிலத்து மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் குறிப்பிட்டப் பேசினார்.
திமுக எந்தவொரு பிரச்சனைக்கும் தாமாகச் சென்று வழிவகுக்காது எனக் குறிப்பிட்ட மேயர் பிரியா, அதேவேளையில் தங்களைத் தேடி வரும் பிரச்சனைகளை ஒருபோதும் விட்டுவிடாது என்றும் கூறினார். "என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்பது பழமொழி. அதேபோல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு மாண்புமிகுந்த பதவியில் இருந்தாலும் திமுக தொண்டர்களாகிய நாங்கள் அவர்களை நிச்சயமாக சும்மா விடமாட்டோம்" என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.